செவ்வாய், 28 அக்டோபர், 2008

நுணா.




நுணா.

1. மூலிகையின் பெயர் -: நுணா.

2. தாவரப்பெயர் -MORINDA TINCTORIA.

3. தாவரக்குடும்பம் -: RUBIACEAE.

4. வேறு பெயர்கள் -: மஞ்சணத்தி, மஞ்சள் நீராட்டி என்பன.

5. இன வேறுபாடு -: வெண்நுணா. (நோனி)MORINDA CHITRIPOLIA

6.பயன்தரும் பாகங்கள் -: துளிர்,இலை, பழுப்பு, காய், பழம், பட்டை, வேர் ஆகியவை மரத்துவப் பயனுடையது.

7. வளரியல்பு -: எல்லா வித நிலங்களிலும் வளர்க்கூடிய சிறுமரம். தமிழகமெங்கும் வளர்கிறது.மா இலை போன்றும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும்உடைய மரம். சுமார் 15 அடி உயரம் வரை வளரும். மரத்தின் உடபுறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும். அதனால் மஞ்சணத்தி என்றழைக்கப்பட்டது. பட்டைகள் தடிப்பாக இருக்கும். விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.


8. மருத்துவப் பயன்கள் -: வெப்பம் தணிக்கும். வீக்கம் கரைக்கும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும். பசியைத் தூண்டும். தோல் நோயகளைக் குணமாக்கும். துணிகளுக்கு நிறமூட்டும்.

‘ பட்டை கரப்பனொடு பாரச்சி லேஷ்மசுர
மொட்டிநின்ற புண்கிரந்தி யோட்டுங்காண்-மட்டலரை
யெந்து நுணாவி ளிலைமாந்தத் தீர்த்துநல்ல
காந்திதரு மேகமடுங் காண். ’

நுணாப் பட்டையானது கரப்பான்,கபசுரம் புண், கிரந்தி இவற்றையும், இலையானது மந்தம் மேகம் இவற்றையும் விலக்கும். ஒளியைத் தரும் என்க.

முறை -: இதன் இலை நடுவிலிறுக்கின்ற ஈர்க்குகளை எடுத்து அதனுடன் துளசி, கரிசிலாங்கண்ணி, மிளகு, சுக்கு முதலியவற்றைச் சேர்த்துக் கியாழமிட்டு வடித்துக் குழந்தைகளின் வயது கேற்றபடி கால் அரை சங்கு அளவாக விட்டுக் கொண்டு வர மாந்த பேதி நிற்கும். இதன் இலையை அரைத்துப் புண் சிரங்கு, ரணம் இவற்றிற்கு வைத்துக் கட்ட ஆறும். இதன் இலையை இடுத்துப் பிழிந்து எடுத்துச் சாற்றை இடுப்பு வலிக்குப் பூச நீங்கும்.

பூதகரப்பான் பட்டை, பூவரசம் பட்டை, இசைப்பைக் கட்டி இவற்றை சமனெடையாகச் சுட்டுக் கரியாக்கி நல்லெண்ணையில் குழைத்துக் கரப்பான் மேற்றடவ நீங்கும். நுணாக் காய்களை ஒரு வீசை அளவிற்றுச் சேகரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் 10 பலம் சோற்றுப்புக் கூட்டி ஒரு மட்பாண்டத்தில் போட்டு அடுபிலேற்றிச் சிறு தீயாக எரித்து வருக்கவும், காய்கள் கரியான சமயம் கீழே இறக்கி ஆற வைத்து அரைத்துச் சீசாவில் பத்திரப் படுத்துக. இதனைக் கொண்டு தந்த சுத்தி செய்து வரப் பல்லரணை, பல்லாட்டம், ஈறுகளில் இரத்தம் சீழ் சொரிதல், பல் கூச்சம் முதலியன குணமாகும்.

நுணா இலைச்சாறு ஒரு பங்கும், உந்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறும் ஒருபங்கு கலந்து 3,4 வேளை கொடுத்து வரச் சகல மாந்தமும் தீரும்.

ஆறு மாதகுழந்தைக்கு -------------------- 50 சொட்டுக்கள்
ஒரு வயது முதல் இரண்டு வயது வரை 15 மி.லி.
மூன்று வயதிற்றகு மேல் ------------------ 30 மி.லி.
வெகு எளிதாகச் செரிக்கக் கூடிய உணவு கொடுக்க வேண்டும்.

நுணாத்தளிர், இலை, பழுப்பு சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத்துடன் ஒரு தேங்காய அளவு அரைத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணையில் மெழுகு பதமுறக் காய்ச்சி எண்ணெயைப் பிரித்து பக்குவப் படுத்தவும். கல்கத்தை சுண்டையளவு காலை, மாலை பாலுடன் கலந்து கொடுக்க வயிற்றுக் கோளாறு தீரும். எண்ணெயை வெண்மேகத்தில் தடவ 6-18 மாதங்களில் குணமாகும்.

நுணாக்காயையும், உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாக நாளும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும் , பல் வலி,பல்லரணை, வீக்கம், குரிதிக் கசிவு ஆகிய நோய்கள் தீரும். சிறந்த பற்பொடியாகும்.

நுணா வேரையையும், காஷாயமிட்டுக் குடிக்கச் சுகப்பேதியாகும். கெடுதலில்லாமல் மலர்ச்சிக்கல் தீரும்.

ஒரு கிலோ நுணாப் பட்டையை இடித்து நான்கு படி நீரில் போட்டு அரைப்படியாகச் சுண்டக் காய்ச்சவும். இத்துடன் அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இந்தக் கலவையில் ஒரு லிட்டர் எள் நெய் சேர்த்துச் சுண்டக் காயச்சி வடித்து வைக்கவும். இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசி, தலைக்கும் தேய்த்து அரைமணி நேரம் சென்று குளித்து வரவும். உடலில் தோன்றும் கழலைக் கட்டிகள், அரையாப்பு கட்டிகள் மேகப்புண் ஆகியன குணமாகும். முறைசுரம், பித்தகுன்மம், படை நோய்களும் குணமாகும்.

நுணாப் பட்டையக் கொதி நீரில் போட்டு ஊறவைத்தால் சாயம் இறங்கிவிடும். வெண்மையான துணிகளுக்குக்கு காவி நிறம் ஊட்டலாம். இந்த காவி ஆடை உள் நோயைத் தீர்க்கும்.

வெண்நுணாவிலிருந்து குளிர் பானம் தயார் செய்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். இதை சென்னையில் ஒரு நிறுவனம் செய்து வருகிறது. இந்தப்பானம் (நோனி) மருத்துவ குணம் வாய்ந்தது.

-------------------------------------- (மூலிகை தொடரும்)

வியாழன், 16 அக்டோபர், 2008

அழிஞ்சில்.


அழிஞ்சில்.

1. மூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.

2. தாவரப்பெயர் -: ALANGIUM LAMARCKII,

3. தாவரக்குடும்பம் -: ALANGIACEAE.

4. இன வேறுபாடு -: கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்களையுடையவை வேறுபடும்.

5. பயன் தரும் பாகங்கள் -: வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை முதலியன.

6. வளரியல்பு -: அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். ( 15-20 அடி உயரம் )நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள் உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் -: நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.

வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய் ) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

அழிஞ்சி இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

சிவப்பு அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.

அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

‘ அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
மொழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சூழாங்
குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
திட்ட மெனவறிந்து தேர். ‘

அழிஞ்சில் மரமானது வாத கோபம், கப தோஷம், சீழ்வடியும் பெருநோய் இவற்றை நீக்கும். ஆனால் பித்தத்தை உபரி செய்யும்.

பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் சிரந்திரணம் சேர் நோய்க-ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தை செய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம். ’

அங்கோலம் என்று சொல்லப்பட்ட அழிஞ்சி கபத்தினால் ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும், பேதி, கிரந்தி, வீரணம் ஆகியவை போம்.

அழிஞ்சில்வேர் விழுதி வேர் இவற்றைச் சமனெடையாகக் கொண்டு சிறு துண்டாக நறுக்கி 5-6 நாள் நிழலில் உலர்த்தி அடியில் பெரிய மட்கலத்தில் போட்டு வாய் மூடி ஏழு சீலை செய்து முறைப்படி குழித்தைலமிறக்கவும். இத்தைலத்தை வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு புறை கொண்ட ரணத்தில் செலுத்திக் கட்டுக் கட்டிக் கொண்டு வர விரைவில் ஆறும்.

அழிஞ்சி வேர்ப்பட்டைப் பொடியில் கசப்பும், குமட்டலும், காரமும் உண்டு. இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம், விரணம், தோல்ரோசம், சுரம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய், விசக்கடி முதலியன போக்கும். வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு பிடிப்புகளுக்கு நன்று.

அழிஞ்சில் வித்து-

‘ நிகருமிடை மெல்லியலே யித்தரையில்
அழிஞ்சில் வித்த தனாற் சாறுபல-மென்னவெனில்
மறையு மஞ்சனமு மாகும் சன வசியம்
அது செய்திடவே நன்று.’

நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும் உலக வசியமும் உண்டாகும்.

இந்த இனத்தில் சாதாரண அழிஞ்சலுடன் கறுப்பு அழிஞ்சில் என்கிற ஓர் இனமுண்டு. காய் இலை நரம்பு இவற்றில் கறுப்பு நிறமோடியிருக்கும். இதுவே விசேஷமானது. இதன் உபயோகத்தைப் பற்றி அனுபவ சித்தியுள்ள பெரியாரிடமிருந்து கை முறையாக நேரில் கற்றுணர வேண்டியது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ள அவா இருப்பின் புலிப்பாணி முதலான மஹரிஷிகளால் கூறப்பட்டுள்ள ஜாலகாண்டங்களில் கண்டறியவும். இதன் வித்துத் தைலத்தைச் சர்ம ரோகத்திறுகும் பூச ஆறும். உள்ளுக்குக் கொடுக்க கப வாதத்தையும் குட்டத்தையும் நீக்கும்.


---------------------------------------------------(மூலிகை தொடரும்)

வியாழன், 9 அக்டோபர், 2008

அரிவாள்மனைப் பூண்டு.


அரிவாள்மனைப் பூண்டு.


1. மூலிகையின் பெயர் -: அரிவாள்மனைப் பூண்டு.

2. தாவரப் பெயர் -: SIDA CAPRINIFOLOLIA.

3. தாவரக்குடும்பம் -: MALVACEAE.

4. வேறு பெயர்- BALA PHANIJIVIKA.

5. பயன்தரும் பாகங்கள் -: இலை, விதை, வேர் முதலியன.

6. வளரியல்பு -: அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மன் நிலத்தில் நன்கு வளமுடன் வளரும். கூர் நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக்குறுஞ் செடியினம். மாரிக் காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில் தானே வளரும். குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும். இது விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் -: இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகித த்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

‘வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
மரிவாள் மூக்குப் பச்சிலை.’

அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவதுந் தவிர மாக விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.

அரிவாள் மூக்குப் பச்சிலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.

-----------------------------------------------------------(மூலிகை தொடரும்)

வியாழன், 2 அக்டோபர், 2008

கண்டங்கத்திரி.


கண்டங்கத்திரி.

1. மூலிகையின் பெயர் -: கண்டங்கத்திரி.

2. தாவரப் பெயர் -: SOLANUM SURATTENSE.

3. தாவரக்குடும்பம் -: SOLANACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் முதலியன.

5. வளரியல்பு -: கண்டங்கத்திரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிற மலர்களையும் சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் வளர்கிறது.

நிலத்தினை நன்கு உழுது விதைப்புக்குத் தயாராக வைக்க வேண்டும். வேண்டிய தொழு உரம் போடவேண்டும். நேரடி விதைப்புக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். நாற்று விட்டு ஒரு மாதத்தில் 4 அடிக்கு 4 அடி இடைவெளியில் நட்டு உயிர் தண்ணீர் பாச்சவேண்டும். பின் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்தால் போதும். 60 நாட்கள் கழித்துக் களை எடுக்க வேண்டும். ஒரு வருடகாலம் முடந்து ஒரே அறுவடையாகச் செய்யவேண்டும். செடி 3750 கிலோ காய் 500 கிலோ கிடைக்கும். பூச்சி நோய் காய் புழு மட்டும் தாக்கலாம். அதற்கு உரிய மருந்து அடிக்க வேண்டும். பறித்த பழங்களை 7 நாட்கள் காய வைக்க வேண்டும். பின் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதன் சாறு இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய வல்லது. இதில் உள்ள ஆல்கலாய்டுகள் ஆராயச்சி செய்து கொண்டுள்ளார்கள். இது கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயற்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்தில் ரூ.12,000-00 செலவு செய்தால் 48,000-00 வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

6. மருத்துவப் பயன்கள் -: கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்ல தொருமருந்து. கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.

வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.

சமூலம் 1 பிடி, ஆடாதொடை 1 பிடி, விஷ்ணுகாந்தி பற்படாகம் இரண்டும் 1 பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக்கி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் சாப்பிட புளு சுரம், நிமோனியா சுரம், மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.(கண்டங்கத்திரி குடி நீர்)கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் அரிசிதிப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் ( ஆஸ்துமா ) என்புருக்கி ( க்ஷயம் ) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்.

பழத்தை உலர்த்தி நெருபிலிட்டு வாயில் புகைப் படிக்க பல் வலி, பல் அரணை தீரும்.

‘காச சுவாசங் கதித்த ஷய மந்த மனல்
வீசுசுரஞ் சந்நி வினைதோஷ - மாசுறுங்கா
வித்தரையு ணிற்கா வெரிகாரஞ் சோகண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்.’

வெப்பமுங் கார்ப்பு முள்ள கண்டங்கத்திரியினால் காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், தீச்சுரம், சந்நி பாதம் ஏழுவகைத் தோஷங்கள், வாத ரோகம் ஆகியவை போம்.

‘வேரிலைபூ காயபழமவ் வித்துடன் பட்டையுமிவ்
வூரிலிருக்க வுடற்கனப்பும் - நீராய்
வரும்பீந சங்கயஞ்சு வாசமுந்தங் காவே
யருங்கண்டால் கத்திரியுளார்’

கண்டங்கத்திரியின் வேர், இலை, பூ, காய், பழம், விதை, பட்டை இவற்றால் நீரேற்றம், சலப்பீநசம், ஈளை, சுவாசம் இவை போம்.

கண்டங்கத்தரிக்காய்-

‘ ஐய மறுந் தீபனமா மாம மலக்கட்டும்
பைய வெளியாகிவிடும் பார்மீதிற்- செய்ய மலர்த்
தொத்திருக்கும் வார் குழலே தூமணலா ருங்கண்டங்
கத்தரிக்கா யைப் புசிக் குங்கால் ’

வெண் மணலிலுண்டாகின்ற கண்டங்கத்திரிக்காயால் சிலேத்தும நோய் தீரும். சீதம் கலந்த மலமும் பசியும் உண்டாம்.

கண்டங்கத்திரிப் பழம்-

‘ காசஞ் சுவாசங் கயஞ்சீதம் பல்லரணை
வீசு சொறிதினவை விட்டோட்டும் - பேசுடலை
யுத்தரிக்குள் தீபனத்தை யுண்டாக்கி டுங் கண்டங்
கத்தரிப்ப ழக்குணத்தைக் காண். ’

கண்டங்கத்திரிப் பழம் இருமல், இரைப்பு, சயம், கபம், பல்லரணை, புடை நமைச்சல் இவற்றை நீக்கும். பலத்தையும் பசியையும் உண்டாக்கும்.
-----------------------------------------(மூலிகை தொடரும்)