சனி, 26 ஜூலை, 2008

திருநீற்றுப் பச்சை.


திருநீற்றுப் பச்சை.

1. மூலிகையின் பெயர் :- திருநீற்றுப் பச்சை.

2. தாவரப் பெயர் :- OCIMUM BASILICUM.

3. தாவரக் குடும்பம் :- LABIATAE.
4. வேறுபெயர்கள் :- உத்திரச்சடை, மற்றும் சப்ஜா.

5. பயன் தரும் பாகங்கள் :- இலை, வேர் மற்றும் விதை முதலியன.

6. வளரியல்பு :- இது சாதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. மேலும் பிரான்ஸ், இந்தோனேசியா, மொராக்கோ, அமரிக்கா, மற்றும் இத்தாலியிலும் பயிரிடப்படுகிறது. தோட்டங்களில் வளர்க்கப்படிகின்றது. இது சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது.
இதன் இலைகள் நடுவில் அகன்றும், நுனிகுறுகியும், நீண்டும் இருக்கும். பூக்கள் வெண்மையாக கதிர் போன்று இருக்கும். உலர்ந்த பின்னர் கருப்பு நிறமாக மாறும். இது நறு மணம் உடைய செடியாகும். இது துளசி இனத்தைச் சார்ந்தது. இது 40-50 செ.மீ. உயரம் வளரக்கூடியது.இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் அஸ்ட்ரகால், பூஜினால், தைமால்டேனின் காம்பர் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.

7. மருத்துவப் பயன்கள் -: இதன் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி வியர்வையை அகற்றும் செய்கை உடையது. இதன் விதை வழுவழப்புத் தன்மையோடு உடலிலுள்ள வெப்பத்தைக் குறைத்துச் சிறுநீரைப் பெருக்கும் செய்கை உடையது. சித்த மருத்துவத்தில் லேகியங்களிலும் தைலங்களிலும் மணத்திற்காக இதனைப் பயன்படுத்துகிறார்கள். பச்சை இலைகள் இருமல், சளி, உபாதைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்குப் பயன் படுத்தப்படுகிறது, பசியைத்தூண்டுவதறுகும் உறக்கம் உண்டாக்குவதற்கும் உதவகிறது. வேர் காயங்களைப் போக்கப் பயன்படுகிறது. இதன் எண்ணெய் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது.

காது வலி, காதில் சீழ் வடிதல் முதலியநோய்களுக்கு இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர காது வலி குறையும்.

முகப்பருக்கள் உடையவர்கள் திருநீற்றுப்பச்சிலைச் சாற்றுடன் வசம்புப் பொடியையும் குழைத்து பூசி வர முகப்பரு விரைவில் மறையும்.

படை முதலிய சரும நோய்களுக்கு இதன் இலைச் சாற்றை நோய்கண்ட இடத்தில் பூசிவர அவை எளிதில் மறையும்.

நாட்பட்ட வாந்தியால் துன்பப்படுபவர்கள் திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் வெந்நீர் கலந்து அருந்தி வர வாந்தி குறையும்.

தேள் கடித்த பின் உண்டாகும் வலிக்கு திருநீற்றுப்பச்சிலைச் சாற்றை கடிவாயின் மீது பூச வேண்டும்.

திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம் அருந்தி வந்தால் வெட்டை நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள், பீனிசம், நாட்பட்ட கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் முதலியவை குணமாகும்.

இதன் விதைகள் சர்பத்தில் போட்டு அருந்தும் பழக்கம் உள்ளது. இவை சிறந்த மணமூட்டியாகச் செயல்படுகிறது. இது ஆண்மையைப் பெருக்கும்.

திருநீற்றுப் பச்சிலையானது பிரசவத்தின் போது ஏற்படும் வலியைக் குறைக்கும்.

ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும். சில சமயம் பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, இந்தச் சாற்றையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.
----------------------------(மூலிகை தொடரும்.)

திங்கள், 21 ஜூலை, 2008

பூவரசு.


பூவரசு.


1) மூலிகையின் பெயர் -: பூவரசு.

2) தாவரப்பெயர் -: THESPESIA POPULNEA.

3) தாவரக்குடும்பம் -: LVACEAE.

4) வகைகள் -: கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும்.

5) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன.

6) வளரியல்பு -: புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும்.வேம்பு போல நூற்றாண்டு கால மரம். மருந்துக்கு மிகவும் ஏற்றது. தென்னிந்தியாவில் அதிகமாக் காணப்படுகிறது.இதன் இலை பசுமை நிறமாகவும், அரச இலையைவிட சற்று அகலமாகவும் இருக்கும். இதன் பூமொட்டுசிறிய பம்பரம் போல் இருக்கும்.மொட்டு மலர்ந்தவுடன் புனல் வடிவில் மஞ்சள் நிறமுடையதாக மலரும். கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். காய்களை உடைத்தால் விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. பூவரசு புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. விதை குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் உண்டாகும்.

7) மருத்துவப் பயன்கள் -: பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.

உடம்பில் என்ன பூச்சி கடித்ததென்று தெரியாத காணாக்கடிகளுக்கு பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பறங்கிப் பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரண்ம் செய்து கொள்ள வேண்டும். இதனைஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.

நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.

இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.

100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சமனளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து வைக்கவும்.குழந்தை வேண்டாம் என்பவர்கள் கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம். விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும்.. ஒரு வருடம் வரை கரு தரிக்காது நல்ல கருத்தடை முறை இது.

பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கெண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.

‘ நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்.’

‘குட்டும், கடி, சூலை கொல்லும், விடபாகம்
துட்ட மகோதரமும், சோபையொடு-கிட்டிமெய்யில்
தாவு கரப்பான் கிரந்திதன் மேகம் போக்கிடும்
பூவரசன் காய் பட்டை பூ.’
------------------------------------------ கும்பமுனி.

‘பெற்றோர்தந்த ரோகங்கள் பிழையால் பெற்ற பாழ் நோய்கள்
பற்றியதொழுநோய் புண்புரைகள் படர்தாமரை கரப்பான்
முற்றும்பற்றாதோடி வடும் பூவரசென்னும் மூலிகையால்
சற்றே பிள்ளை பேற்றுக்கும் தாழ்பாளாகும் பூவரசே.’

----------------------------------------(மூலிகை தொடரும்)

சனி, 12 ஜூலை, 2008

வேலிப்பருத்தி.


வேலிப்பருத்தி.

1) மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.

2) தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.

3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE

4) வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

5) பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.

6) வளரியல்பு -: தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள் -: இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.
இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.
நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.
கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.
இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.
காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.
இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.
இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.
தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

'ஆலித் தெழுந்தநோ யத்தனையும் தீருமேவேலிப் பருத்தியதன் மெல்லிலையால்-வேலொத்துக்கண்டிக்கும் வாதஞ்சன்னி தோஷ மும்போமுண்டிக்கும் வாசனையா மோது'

'உத்தா மணியிலையா லும்வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'

----------------------(மூலிகை தொடரும்)

திங்கள், 7 ஜூலை, 2008

நெல்லி.


நெல்லி.
1) மூலிகையின் பெயர் -: நெல்லி.
2) தாவரப்பெயர் -: EMBILICA OFFICINALLIS.
3) தாவரக் குடும்பம் -: EUPHORBIACEAE.
4) வகைகள் -: பி.எஸ்.ஆர் 1, காஞ்சன் என் ஏ 7கிருஷ்ணா சக்கையா, மற்றும் கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
5) வேறு பெயர்கள் -: அம்லா, ஆமலகம், கோரங்கம்,மிருதுபாலா.
6) பயன்தரும் பாகங்கள் -: இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை முதலியன.
7) வளரியல்பு -: இந்தியாவில் எங்கும் காணக்கிடைக்கும். 800 மீட்டர் உயரம் வரை மலைகளில் நன்றாக விளையும். மற்ற நிலங்களில் சுமாராகவிளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக்கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும், அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக்காயகளையும் உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றுள்ளது.இலையடி செதில் மிகச்சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும் கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின்எண்ணிக்கையைவிடக் குறைவு. பூ விதழ்கள் ஆறு.தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது.வெடியாக்கனி பல வீனப் பட்டதாக இருக்கும். உருண்டைவடிவமானது. சதைப்பற்றுள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்றுகோணங்கள் உடையது. விதையுறைக் கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய் விடும், மற்றவை 6 வருடங்கள் கூட ஆகும்.இது விதைமூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கும் செய்யப் படுகிறது.
8)மருத்துவப்பயன்கள் -: நெல்லியன் செய்கை, இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும்.
நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.
மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60
வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.
இதன் இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்று எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய்ஒன்றரை லிட்டர் கலந்து அதிமதுரம், ஏலம், கோஸ்டம், பூலாங்கழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, திருகடுகு, தான்றிக் காய், கடுக்காய், வகைக்கு 15 கிராம்தூள் செய்து கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி (நெல்லித்தைலம்) வாரம் 2 முறை தலை முழுகி வர கண்காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் தீரும்.
2 கிலோ வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரைக் கிலோ சர்கரை சேர்த்துப் பாகாக்கி அதில்திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெள்ளைக் குங்கிலியம்,கற்பூரம், வாயய் விளங்கம், அதிமதுரம், கூகைநீறு, கொத்த மல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளறி அரைலிட்டர் நெய் சேர்த்துக் காலை, மாலை கழற்சிக்காய் அளவு சுவைத்து பால் அருந்த மேகசூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல்என்புருக்கி, இருமல், ஈழை, காசம், கபம்,வாயு, பீ னிசம், பொருமல் அனைத்தும் தீரும்.
நெல்லி இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும்.
வேர்ப் பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்குப் புண் குணமாகும்.
நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக்காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக காலை,மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கோதிப்பு தீரும்.
15 கிராம் நெல்லிக் காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லி.யாக 3 வேளை4 நாள் சாப்பிட மிகு பித்தம் தணியும்.
''சுத்தசுரம் தோலாப் பெரும் வாந்திபித்தசந்தி பாதமிசை பேருங்காண்-மெத்தமணம்நாறு மயர்க்கூந்துன்பின்னே காவும் இனிமை யெனக்கூறுமரு நெல்லியின் வேர்க்கு''
அரு நெல்லிச் சாற்றால் வெள்ளை படுதல் குணமாகும். வாந்தி நிற்கக் கொடுக்கலாம்.இதன் வடகத்தை துவையலாக வழங்க உடல் குளிர்ச்சி உண்டாகும். கண் ஒளிபெறும், காமாலை நீங்கும், பித்தம் போகும். மலமிழகும்.
---------------------------(மூலிகை தொடரும்)